தேர்வாளர் எண் 111602
“My father didn't tell me how to live; he lived, and let me watch him do it”
- Clarence B Kelland
தேர்வாளர் எண் ‘111602’ க்கு அப்போது முப்பத்தி ஐந்து வயதாகி இருந்தது. இனி எந்த ஒரு குடிமைப் பணி தேர்வாணையத்தின் பரீட்சைகளிலும் கலந்து கொள்ள முடியாத கடைசி வயதில், வாழ்க்கை மனைவியுடனும் ஐந்து வயது பெண் குழந்தையுடனும் கணவனை இழந்த அம்மாவுடனும், மதுரா கோட்ஸ் நூற்பாழையின் முன்னாள் லேபர் என்ற பெயரோடும், தேர்வாணையத்தின் பரீட்சையில் இரண்டு முறை தோல்வியுற்றும், வேலையின்றி வறுமையில் ஓடிக்கொண்டிருந்தது.
இந்த முறை கிடைக்காவிட்டால் அடுத்து என்ன செய்வதாக உத்தேசம் என்று அக்கறையோடும் நகைப்போடும் கேட்பவர்களுக்கெல்லாம், அடுத்து என்ற வார்த்தையையே மறந்து இருந்த தேர்வாளர், அடுத்து என்ற வார்த்தையை அவர்களுக்கும் மறக்கச் செய்து பரிட்சையின் முடிவுக்காக காத்திருந்தார்.
ஒரு வழியாக அந்த நாளும் முதன்மை தேர்வின் முடிவுகளைத் தாங்கியிருக்கும் செய்தித்தாளின் வருகையோடு பிறந்தது. வீட்டிற்குள் மனைவி குளித்துக் கொண்டிருக்க, புகைப்படமாக மாறியிருந்த அப்பாவிற்கு கீழே அமர்ந்து அம்மா ஏதோ வேலைப் பார்த்துக் கொண்டிருக்க, மகள் தூங்கிக்கொண்டிருக்க, நண்பர்கள் செய்தித்தாளோடு வீட்டிற்குள் ஓடி வந்தனர். டேய் ரிசல்ட் வந்துருச்சு டா உன் நம்பர் என்ன என்றுக் கேட்டுக்கொண்டே தாளைப் புரட்டினர். தேர்வாளர் ‘111602’ க்கு மூச்சே நின்று விட்டது, இத்தனை வருட கஷ்டங்கள் எல்லாம் இனி தீர்ந்து போய் விடும் என்ற மகிழ்ச்சியோடும், ஒருவேளை எதுவும் தவறாகி விட்டால் மறந்து போயிருந்த ‘அடுத்தென்ன’ என்ற வார்த்தை மீண்டும் நினைவுக்கு வந்து விடுமோ என்ற பயத்தோடும், தன் தேர்வு எண்ணை நண்பர்களிடம் சொல்லி விட்டு, அவர்களின் பதிலுக்காக காத்திருந்த அந்த நொடிகள், A&F Harvey Brothers 1892ல் துவங்கி இருந்த வரலாற்று பிரசித்திப் பெற்ற மதுரா மில்ஸ் நூற்பாழையில், தன் தந்தை சப் மேனேஜராக பணியாற்றிய அதே அலுவலகத்தில், தந்தையின் இறப்பிற்குப் பின் வறுமையின் காரணமாக கடைநிலைத் தொழிலாளியக இரவு நேர ஷிப்ட் பார்த்த பத்து வருட காலத்தை விடவும் கொடியதாக இருந்தது.
சிறிது நேரம் கழித்து நண்பர்களின் தலை செய்தித்தாளில் இருந்து நிமிர்ந்து தேர்வாளரைப் பார்த்து உன் நம்பர் இல்லடா என்று வருத்தத்துடன் சொல்ல, அதை ஏற்றுக்கொள்ளாத தேர்வாளர் இங்கே குடு என்று செய்தித்தாளைப் பிடிங்கி பார்த்த ஒரே நொடியில், பறவையின் கண்களைத் தவிர வேறு எதுவும் தெரியவில்லை என்று சொன்ன அர்ஜூனனைப் போல் தேர்வாளருக்கும் அத்தனை எண்களுக்கு நடுவிலிருக்கும் தன் எண்ணான ‘111602’வை தவிர வேறு எதுவும் தெரியவில்லை, இதோ இருக்கு பாருடா என்று சொல்லி நண்பர்களிடம் காண்பித்தார். நான் பாஸ் ஆகிட்டேன் மா என்று அம்மாவிடம் சொல்லிவிட்டு, குளியலறையில் இருந்த மனைவியிடமும் விஷயத்தைச் சொல்ல, குளித்துக்கொண்டிருந்த மனைவி ஈர துணிகளோடு, பாஸ் ஆன தகவல் கேட்டு வெளியே வந்து கட்டி அணைத்து ஏங்கி ஏங்கி அழ, தேர்வாளர்க்கும் அழுகை வந்தது. தேர்வாளரின் அம்மாவும் வீட்டிற்கு அப்போது வந்திருந்த சகோதரிகள் என்று அனைவரும் அழ, புகைப்படத்திலிருக்கும் தேர்வாளரின் அப்பா மட்டும் மெல்லிய புன்னகை பூத்திருந்தார்.
அதன் பின் தேர்வாளர் எண் ‘111602’ நேர்முகத் தேர்விலும் வெற்றி பெற்று, சு. இராமநாதன் - செயல் அலுவலர் - இந்து சமய அறநிலையத் துறை என்று மாறியிருந்தார். முதல் பணியிடம் பெரியகுளம் பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் மற்றும் கௌமாரி அம்மன் திருக்கோயில். முதல் பணிக்காலத்திலேயே கோவிலிற்கு குடமுழுக்கு செய்யும் பாக்கியத்தோடு பணியில் சேர்ந்தார். பணியில் சேர்ந்த இரண்டு வருடங்களுக்கு பின், அந்த கௌமாரியின் அருளால் பிறந்த எனக்கு, கௌமாரியின் நினைவாகவும், வேறு சில காரணங்களுக்காகவும், கௌதம் என்று அந்த தேர்வாளரான என் அப்பா பெயரிட்டார்.
அப்பா பணியில் சேர்ந்து இன்றோடு இருபத்தி ஐந்து ஆண்டுகள் கழிந்து விட்டன. அப்பாவிற்கு அறுபது வயது ஆகிவிட்டது. தன் பணியை சிறப்பாக செய்து முடித்துவிட்டு இன்று பணி ஓய்வு பெறுகிறார்.
வாழ்க்கையில் எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும், எந்த சூழ்நிலையிலும் நேர்மையாக இருக்க வேண்டும் என்று தன் அப்பா தனக்கு சொன்னதைத் தவிற வேறெதையும் பெரிதாக என் அப்பா எனக்கு வாழ்க்கைப் பாடமென சொல்லித்தந்ததில்லை. மாறாக அவர் வாழ்ந்துகொண்டிருக்கிறார் அதை பார்த்து கற்றுக் கொண்டிருக்கிறேன்.
என் வாழ்வின் முதல் நாயகனுக்கு அன்புடன் இனிய பணி ஓய்வு வாழ்த்துக்கள்.
ம.ரா.கௌதம் ராஜன்
30/06/2025
Comments
Post a Comment