தாத்தாவின் நூறாவது பிறந்த நாள்
ஆயிரத்தித்தொள்ளாயிரத்தி அறுபத்தி ஐந்தாம் ஆண்டு, ஆகஸ்ட் முடியாமலும் செப்டம்பர் தொடங்காமலும் இருந்த காலத்தில், தூங்காநகர மதுரை, அரசாங்கத்தின் வற்புறுத்தலால், தூங்குவதைப் போல் தன் வெளிச்சத்தை மறைத்துக்கொண்டும் முணுமுணுத்துக்கொண்டு பேசியும் தூங்குவதாகக் காட்டிக்கொண்டிருந்த நேரத்தில், மேல மாசி வீதியில் காக்காத்தோப்பு மற்றும் சம்பந்த மூர்த்தி தெருவிற்கு இடையில் தெற்கு நோக்கியிருக்கும் சூடம் சாமியார் சந்தின் தெற்கு முனையிலிருக்கும் முதல் வீட்டின் மாடியில் விளக்கு எரிந்து கொண்டிருந்ததோடு ஒர் பெண்மணியின் உருவமும் வெளியே தெரிந்தது. இரண்டு ஆண் குழந்தைகளும் ஒரு பெண் குழந்தையும் தூங்கிக்கொண்டிருக்க, பணி முடிந்து வரும் தன் கணவருக்காக காத்துக் கொண்டிருந்தாள் அந்த பெண்மணி. அந்த பெண்ணின் மாடி வீட்டிற்கு எதிரில் இருக்கும் அண்டை வீட்டாரான ஆச்சியின் வீட்டில் மட்டும் தான் தொலைபேசி இருந்ததாலும் பொழுது சாய்ந்த பின்பு அடுத்த வீட்டிற்கு செல்லாததாலும் அந்த பெண் தொலைபேசி கண்டுபிடித்திராத காலத்தில் வாழ ஆரம்பித்துவிட்டிருந்தாள். நேரம் செல்ல செல்ல கவலை ஏற்பட்டு அரசாங்க உத்தரவையும் மீறி விளக்கை ஏற்றினாள். சில சமயங்களில் கணவர் தாமதமாக வருவது இயல்பு தான் என்றாலும் அரசாங்கத்தின் ஊரடங்கு மற்றும் பிளாக் ஔட் ஆணை அமலில் இருக்கும் போது தாமதமாக வருவது அந்த பெண்ணிற்கு பயத்தைக்கொடுக்க மீனாட்சியை வேண்டிக்கொண்டே சாலையைப் பார்த்தவாறு வாசலில் அமர்ந்திருந்தாள். கனத்த கருப்பு பூட்ஸ் அணிந்த காலுடன் மிதிவண்டியை மிதித்துக்கொண்டே வெள்ளை சட்டை ,வெள்ளை பேண்ட் அணிந்திருந்த, மதுரா மில்ஸின் பில் பாசிங் பிரிவின் சப் மேனேஜர் கணவர், தெருவிற்குள் நுழைந்தவுடன் தான் அந்த பெண்ணிற்கு உயிர் வந்தது. சீக்கிரம் வீட்டிற்கு வந்தாதான் என்ன அரசாங்க உத்தரவு இருக்கிறதே என்று கோபம் கலந்த கவலையோடு கேட்ட மனைவிக்கு, ஆமாம், அவன் ஆயிரம் உத்தரவு போடுவான், என் வேலை எனக்குத் தான் தெரியும் என்று சொல்லிக்கொண்டு சற்றும் கவலையில்லாமல் படியேறி அவர் வீட்டிற்குள் செல்ல, வாசலில் விசில் அடித்துக்கொண்டும் தடியை கையில் ஏந்தியும் முறைத்துக்கொண்டே வந்த காவலாளி அந்த பெண்ணை திட்ட ஆரம்பித்து விட்டார். ஏம்மா, உங்களுக்கெல்லாம் பொறுப்பில்லையா, வீட்டில் குண்டு போட்டால் என்ன செய்வீர்கள், விளக்கை அமர்த்துமா என்று கடிந்து கொள்ள, கணவர் வந்ததால் விளக்கை அமர்த்திக்கொண்டும் கதவை தாழிட்டுவிட்டும் வீட்டிற்குள் சென்றாள் அந்த பெண்.
ஐம்பத்தி ஒன்பது வருடங்கள் கழித்து இந்தியா பாகிஸ்தான் போரை நினைவு கூர்ந்த அந்த பெண்மணி, என் ஆத்தாவாக, எண்பத்தி நான்காம் வயதில் இருக்கிறார், அவரின் கணவர், என் தாத்தா, ஐம்பத்தி ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு எப்படி இருந்தாக ஆத்தா சொன்னாரோ அதே உருவத்தில் புகைப்படத்திலிருந்து என்னை நோக்கியவாறு சுவரில் தன் நூறாவது வயதில் இருக்கிறார்.
ஆமாம், இன்று, தாத்தாவிற்கு நூறாவது பிறந்த நாள்.
வீட்டை சுத்தம் செய்யும் போது, பல வருடங்களாக மறைந்து இருந்த வரலாற்று பொக்கிஷமான என் தாத்தாவின் எஸ் எஸ் எல் சி சான்றிதழ், திடீரென்று ஒரு நாள் என் கைகளுக்கு கிடைத்த போது தாத்தாவின் பிறந்த நாள் பற்றிய தகவல் கிடைத்தது. தாத்தா பெரிதாக தன்னை பற்றி ஏதும் தன் குடும்பத்திடம் பிரஸ்தாபிக்கவில்லை என்பது ஆத்தா சொல்லும் கதைகளைக் கேட்கும் போது தாத்தாவின் பால்ய காலம் பற்றிக்கேட்டால் கதைகளற்று போகும் ஆத்தாவின் நிலையிலிருந்து அறிந்து கொண்டேன். ஆக, இன்று புகைப்படத்தில் இருக்கும் தாத்தா என் ஆத்தாவோடும், அப்பாவோடும், அத்தைகளோடும் கொண்ட உறவின் வழியே எழுந்த கதைகளின் படிமத்தால் ஆன ஒரு உருவமே தவிர இரா.சுப்பையா என்ற தனி மனிதரின் உருவம் அல்ல. சுப்பையா என்கிற அந்த தனிமனிதரைப் பற்றிய தகவல்கள் ஏதும் பெரிதாக என் ஆத்தா மற்றும் அப்பா அத்தைகளின் கதைகளில் இல்லை. இருப்பினும், சுப்பையா என்ற அந்த தனிமனிதரின் சில குணாதிசயங்களை நான் அவருடயதுததான் என்று கேட்டறியும் முன்பே அவர் அந்த குணாதிசயங்களை எனக்குள் கடத்தியிருந்திருக்கிறார். உறக்கத்தில் அளவிற்கு அதிகமாக தலையணையில் எச்சில் வடிப்பதும், கேட்பவருக்கு என்ன சொல்ல வருகிறோம் என்று புரியாத வண்ணம் வேகமாக பேசுவதும், தாத்தா சுப்பையா, வம்சத்தில் வேறு யாருக்கும் கொடுக்காத சொத்து. அது ஒவ்வொரு இரவும் ஒவ்வொரு சொல்லிலும் இன்று என்னுள் தொடர்கிறது.
தாத்தாவிற்கு சொந்தமாக வீடு வேண்டும் என்று ஆசையிருந்தது ஆனால் அது நிறைவேறும் முன்பே அவர் இறக்க நேர்ந்தது. என் அப்பா வேலைக்கு சென்று தாத்தா இறந்து இருபத்தி இரண்டு வருடங்கள் கழித்து தான் ஒரு சிறிய வீடு கட்டினார். பின்பு பதினாறு வருடங்கள் கழித்து இந்த வருடம் அந்த சிறிய வீட்டின் மாடியில் ஒரு அறையை எழுப்பி வீட்டை கொஞ்சம் விஸ்தரிப்பு செய்தார். வீட்டின் வேலைகள் எல்லாம் முடிந்து வாசலில் சுப்பையா ஜானகி என்று தாத்தா ஆத்தாவின் பெயர் பொறித்த பலகையை கடையில் வாங்கி வந்து அதை மாட்டும் வாய்ப்பு, எனக்கு தாத்தாவின் நூறாவது பிறந்த வருடத்தில் கிடைத்தது. சுப்பையாவிற்கும் தன்னுடைய நூறாவது பிறந்த ஆண்டில் அவரின் கனவு நிறைவேறியது.
பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்றறியேன், ஆசிகள் மட்டும் வேண்டும் அன்பு பேரன்,
ம.ரா.கௌதம் ராஜன்
16/12/2024
( R.Subbiah 16/12/1924 - 26/08/1986)
(சுப்பையா ஜானகி)
(சுப்பையாவின் பெயர் பொறித்த எங்கள் வீடு)
Comments
Post a Comment