பாகீரதியின் மதியம் - ஓர் ஓவியம்

அவன் அதைவார்த்தைகளால் வெளிப்படுத்த தயங்கினான் காரணம், எந்த வார்த்தைகளால் அவளையும் அவள் கதையும்பற்றி எந்த அபிப்பிராயத்தைச் சொன்னாலும் அது அவனுடைய அறியாமையிலும் மனக்கச்சத்திலும் தோய்ந்த உளறலாகவே வெளிப்பட்டுவிடுக்கூடுமென்று நினைத்து பயந்தான் என்ற இந்த வரிகள் தான் (தாண்டவராயன் கதை - பா வெங்கடேசன்), பாகீரதியின் மதிய நேரக் கனவுகளால் உருவான மனிதர்கள் கனவுக்குள் ஒருவராகவும் கனவிற்கு வெளியே வேறொருவராகவும் நடமாடிக்கொண்டிப்பதை இன்பம் என்பது உண்மையை தேடும் பயணத்தில் தான் இருக்கிறதே தவிர அந்த உண்மையை கண்டறிவதில்லில்லை என்ற டால்ஸ்டாயின் கூற்றை மெய்ப்பிக்கும் வண்ணம்
தன் பூர்வ ஜென்ம காதலை இந்த ஜென்மத்தில் விடையறியாமல் தேடும் தன் தேடலை நேசிக்கிற மருத்துவர் சொல்லும், பாகீரதியின் மதியம் என்கின்ற புதினத்தைப் படித்துமுடித்து இந்த வரிகளை எழுதும்பொழுது தோன்றுகிறது. 

அப்படியான மனநிலையில் இருந்துகொண்டு நான் எழுதும் இந்த வரிகள் அறியாமையால் உளறும் வார்த்தைகளாகத் தெரிந்தால் அதற்கு இரண்டு காரணங்கள் இருக்கக்கூடும், ஒன்று மதிய நேர தூக்கம் தரும் போதைக்கு நிகரான மயக்கத்தை உண்டாக்கும் புதினத்தின் மொழியாக இருக்கலாம் அல்லது இத்தனை நாள் வரையில் நனவிலியில் பெண்னென்றால் உருவாகும் தோற்றத்திற்கு உயிர் கொடுத்து கொண்டிருந்த தி ஜாவின் யமுனாவையும், டால்ஸ்டாயின் அன்னா கரினினாவையும், பல்க்ககாவ்வின் மார்கரிட்டாவையும் பின்னுக்கு தள்ளி உயர்ந்து நிற்கும் பாகீரதியின் அழகாக இருக்கலாம்.

ஆனால் புதினங்களில் வரும் பெண்ணின் அழகிற்கு நாம் மயங்குவது, அவளின் உடலைப் பற்றியதான வர்ணனைகளால் அல்ல மாறாக (ரசனை கொண்ட எந்த ஒரு மனிதனாலும் அப்படி ஒரு அழகை தானாகவே வர்ணித்துக் கொள்ளமுடியும் வேறொரு கதைசொல்லியின் வர்ணனை தேவையில்லை, ஆனால் ரசனை கொண்ட மனிதர்களுமே கூட தன்னால் சிருஷ்டிக்கப்படாத அழகை காதலிப்பதற்கு காரணம் இருக்கத்தான் செய்கிறது), அவள் கதைக் களத்தில் எவ்வாறு சித்தரிக்கப்படுகிறாள், கதையில் வரும் பிற பாத்திரங்கள் அந்தப் பெண்ணை எப்படி காண்கிறார்கள், கதை சொல்லி எப்படி காண்கிறார், அந்தப் பெண்ணே தன்னை எப்படி காண்கிறாள், தன்னை எவ்வாறு காண நினைக்கிறாள் என்பதோடு மட்டுமின்றி அந்தப் பெண்ணை பார்த்திராத வாசகனின் கண்களுக்கு முன் கதைசொல்லி தன் கதையைக்கொண்டும் கதாபாத்திரங்களைக்கொண்டும் அவளை படைக்கும் விதத்தால் தான் (சுய வர்ணனையால் அழகை சிருஷ்டிக்கும் திறன் இருப்பவரும்கூட பிறர் படைத்த அழகை ஏற்றுக்கொள்ள காரணம் இந்த வகையான அழகை அந்தப் பெண் பெற்றிருப்பதால்தான்). அந்த வகையில் பாகீரதியின் அழகானது அவளின் உடலைப் பற்றியதான வர்ணனைகளால் உருவனாது அல்ல, அவளின் கனவுக்குள்ளேயும் வெளியேயும் இருக்கும் மனிதர்கள் தங்களுடைய எண்ணங்களாலும் பார்வையாலும் சிருஷ்டித்த உருவத்தை நம் கண்முன்னே கொடுக்கும் பா வெங்கடேசன் அவர்களின் மொழித்திறனால் உருவானது. ஆக புதினம் தந்த மயக்கத்தின் விளைவால் ஏற்பட்ட உளறலுக்கு காரணம் புதினத்தின் மொழி மட்டுமே.

தன் புனைவுகளில் சம்பவத்தை விவரிக்க மொழியைப் பயன்படுத்தாமல் சம்பவத்தை உருவாக்க மொழியைப் பயன்படுத்தும் பா வெங்கடேசன் அவர்கள் தன் மொழியின் அழகால் பாகீரதிக்கும் புதினத்திற்கும் அழகு சேர்த்து, புதினங்களில் வரும் காட்சிகள் அனைத்தையும் விவரிக்காமல் வர்ணிக்கும் ஜாலத்தை நிகழ்த்தி, பாகீரதியின் மதியம் என்கின்ற இந்த புதினத்தைப் பார்த்து ரசிக்கும், பௌர்ணமி நிலவொளியில் சமுத்திரத்தில் படகில் பயணிக்கும் போது கேட்கின்ற பெரிய அலைகளின் ஓசை கொடுக்கும் அமைதியைத் தருகிற, ஓர் ஓவியமாக படைத்து நம்மை புதினத்தில் மிதக்கச் செய்கிறார்.

அப்படியென்றால் இது பெண்ணின் அழகைப்பற்றி மட்டும் பேசும் ஒரு காதல் கதையா, எல்லா நிகழ்வுகளையும் வெறும் ஆண் பெண் உறவின் பின்னணியிலேயே வைத்துப் பார்க்கும் புராணிக புத்தியின் வெளிப்பாடா என்று கேட்க துடிக்கும் மனங்களுக்கு‌ பதில் இதே கேள்வியை புதினத்தில் கனவிற்கு வெளியே இருந்து கேட்ட கதாபாத்திரம் கனவுக்குள்ளே இருக்கும் தன்னை உணர்ந்து கனவுக்கு வெளியே பதில் தெரிந்துகொள்ளும் தருணத்தை படிக்கும் போது கிடைக்கும். அப்படியென்றால் இது என்ன கதைதான் என்று கேட்போர்க்கு முன்பு சொன்ன ஓவியம் என்கின்ற‌, என்னுள் தோன்றிய, உவமையைவைத்தே பதில் சொல்கிறேன். இந்த கதை பாகீரதி என்ற பெண்ணின் வாழ்க்கையைச் சுமக்கும் ஓர் சுவர் ஓவியம். அந்த ஓவியம் வரையப்பட்டு இருக்கும் சுவர்‌ சங்கம் வைத்து தமிழ் வளர்த்த தூங்காநகரமான மதுரை, ஆனால் ஓவியர் வரைந்து முடிக்கும் வரை பொருமை கொண்டிருக்காத இந்தி எதிர்ப்புப் போராட்டத்தாலும் அவசரநிலை பிரகடனத்தாலும் அல்லோப்பட்டுக்கொண்டிருக்கும் வெவ்வேறு காலத்து மதுரை. அந்த சித்திரத்தின் தூரிகை இடது சாரி சிந்தனையாளர்களைக் கொண்ட வங்காளம், ஆனால் அதே இடது சாரி சித்தாந்தம் இடது சாரி தீவிரவாதமாக மாறிக் கொண்டிருக்கிற பிரிவினைக்கு முன்பும் பின்புமான காலத்து வங்காளம். அந்த ஓவியத்தை வரைவது, சித்திரங்களை நேசிக்கும் பெண்ணை அவளின் சித்திர மோகத்தைக்கொண்டே வென்று மனைவியாக்கிக் கொண்ட ஆத்திக கணவனும், அதே பெண்ணை நேசிக்கும் நாத்திக காதலனின் நண்பரும், சித்திரங்கள் மேல் அவளுக்கு மோகம் வர காரணமாக இருந்த சைத்திரிகரை கணவனாக கொண்ட பெண்ணும், அவளின் காதலனும் சொன்ன கதைகளைக் கேட்டுவிட்டுத் தன் இருத்தலின் ஒரு சிறு பகுதி கூட அவளைச் சென்று சேரவில்லை என்று புலம்பும் யாசுநெரி கவாப்பட்டாவின் தூங்கும் அழகிகளின் வீடு என்னும் கதையின் நாயகனைப் போலும், தன் இருத்தலை அறிந்தெயிராத ஒரு பெண்ணின் இருத்தலை தான் அறிந்திருப்பதால் அவளைத் தேடும் சரமாகோவின் நாயகன் போலும், டிராகுலா மீது மோகம் கொண்ட,  தன் முடிவில்லா தேடலையும் அந்த பெண்ணையும் நேசிக்கின்ற, மனநல மருத்துவர். அந்த ஓவியம் கூறும் தத்துவம் பிராமணியம், சுயமரியாதை, காந்தியம், நாத்திகம், மார்க்ஸிசம், மாவோயிஸம், ஆண் பெண் உறவு, காதல், கணவன் மனைவி உறவு, சிறுதெய்வ வழிபாடு, முதலாளித்துவம் என்று இவை அனைத்தையும் ஒன்றுசேர்த்தது.
இவ்வளவு பெரிய கதைகளத்தையும் கதை மாந்தர்களையும் கொண்ட இந்த சுவர் ஓவியம் காதலையும் கடந்து விவரிக்கயியலாத ஒர் உன்னத நிலையில் இருக்கின்றபட்சத்தில் காதல் கதை என்ற ஒற்றை  சொல்லில் அடக்க முடியாது. அப்படித்தான் சொல்ல வேண்டும் என்று நிர்பந்தித்தால், இது தனிப்பட்ட ஒரு ஆணின் ஒரு பெண் மீதான காதல் கதை என்று சொல்லாமல், ஓவியத்தின் மீதும் மதிய நேர சொப்பனத்தின் மீதும் சித்தாந்தகளின் மீதும் வரலாற்றின் மீதும் கதை சொல்லலின் மீதும் காதல் வயப்பட்டிருக்கும் மனிதர்களின் காதல் ஓவியம் என்று சொல்லலாம். பொம்மலாட்டகாரனின் கயிற்றில் இயங்கும் பொம்மைகளைப் போல், இந்தக் கதை கதை சொல்லியின் மொழி என்னும் மாயகயிற்றில் இயங்கி நம் மனதில் இத்தனை விஷயங்களையும் படிமமாக்குவதோடில்லாமல் மதிய நேர தூக்கத்தின் மீதும் ஓவியக் கலைமீதும் நம்மை காதல் கொள்ளச்செய்கிறது(டன்கேனை கொலை செய்த பிறகு தன் கைகளில் இருக்கும் அவனின் இரத்தத்தை துடைக்க முடியாமல், கைகளோடு ஒட்டியே இருப்பது போன்றெண்ணி, குற்ற உணர்வில் தவிக்கும் மேக்பெத்தின் மனைவி போல் புதினத்தைப் படித்து முடித்தபின்பும் புதினம் என் மனதிலேயே ஒட்டிவிட்டதால்தான் என்னவோ அதில் வருவது போன்ற நீண்ட நெடும் வாக்கியங்கள் என்னிடமும்மிருந்து வருகிறது).

மேலே சொன்ன அனைத்தும் புதினம் கொடுத்த மயக்கத்தின் விளைவால் உண்டான முட்டாளின் உளறல் தானே தவிர உண்மையில்லை என்றுத் தோன்றினாலும் பிரச்சினையில்லை. ஏனெனில் வாழ்க்கை என்பதே முட்டாள் ஒருவனால் சொல்லப்படும் கதைதான் என்று ஷேக்ஸ்பியரின் வரியை நம்புபவனகா நான் இருக்கிறேன். அதனால் தான் இந்த உளறல்களைப் பதிவும் செய்கிறேன். இந்த உளறலுக்குக் காரணமான மொழியால் ஆன பாகீரதியை ஒருவேளை நீங்கள் பார்த்திருப்பீர்கள் ஆனால் சந்தித்திருக்கமாட்டீர்கள் (இரண்டுமே ஒன்று தானே என்று கேட்டால்(நானும் கூட அப்படிக் கேட்டேன்) இல்லை ஒன்றில்லை. இரண்டுக்கும் வித்தியாசம் கதையில் இருக்கிறது, அதையும் நானே சொன்னால் என்னுடைய உளறலுக்குக் காரணம் பாகீரதி அல்ல பைத்தியக்காரத்தனம் என்ற முடிவு எடுத்துவிடக்கூடும் (ஏற்கனவே எடுத்திருக்கலாம்) ஆக அந்த பொறுப்பைக் கதை சொல்லியிடம் விட்டு விடுகிறேன்(எனக்கு அவரைப் போல் சொல்லவும் தெரியாது)). மதுரை வடக்கு வெளிவீதியிலுள்ள வீடு என்னும் சுவரில் தான் அவள் ஓவியமாக இருக்கிறாள் போய் சந்தித்துவாருங்கள்.


05.06.2023
இரவு 08:26
ம.ரா. கௌதம் ராஜன்
M.R. Gowtham Rajan


பாகீரதியின் மதியம்
காலச்சுவடு பதிப்பகம்

Comments