என் கதையின் கதைசொல்லி
நான் எழுதும் கதைகள் நான் எழுதும் கதைகளாகவே இருப்பதற்கு, என் இலக்கிய வாசிப்பும், என் அப்பாவின் எழுத்தும் தான் காரணம் என்று நம்பும் மனிதர்களுள், என் எழுத்திற்கு உண்மையான காரணமாகிய மனிதரும் (தான்தான் காரணம் என்று அறியாமல்) அடக்கம். ஆனால் உண்மையில் என் கதை சொல்லலிற்கு பின்னிருப்பது, அன்று மாலை திரையரங்கு ஒன்றில் தரையில் அமர்ந்தவாறு படம் பார்த்துக் கொண்டிருக்கையில், படம் பாதியில் நிறுத்தப்பட்டு அனைவரும் கலைந்து செல்லுமாறு உத்தரவு வர, படத்தை முழுவதுமாக பார்த்துவிட்டுத்தான் வீட்டுக்குச் செல்வேன் என்று அழுதுகொண்டே வீட்டை நோக்கி நடந்து சென்றுகொண்டிருக்கும் தன்னை, காந்தியை கொன்று விட்டார்கள் நாடே ஸ்தம்பித்திருக்கிறது, படமெல்லாம் கிடையாது என்று சொன்ன காரணங்கள் எதுவும் சமதானப் படுத்தவில்லை என்று சொல்லிய என் ஆத்தாவின் குரல் மட்டும் தான்.
காந்தியார் கொல்லப்பட்டார், ஆகையால் படம் நிறுத்தப்பட்டது என்று ஒரு வரியில் அந்த நிகழ்வை அவர் சொல்லாமல், மேலே சொன்ன வடிவத்தில் சொன்ன அவரின் கதை சொல்லல் தான், தன் வாழ்வில் நடந்த முக்கிய நிகழ்வுகள் முதல் அன்றாடம் நிகழும் சாதாரண சம்பவங்கள் வரை அனைத்தையுமே ஒரு புதினத்திற்கு ஒப்பாக, அவருட்பட அவரின் ரத்த சொந்தங்களான என் அப்பா, அக்கா, அத்தைகள், அத்தை மகள்கள் மட்டுமல்லாது அவருடன் தினமும் தொலைபேசியில் பேசும் அவரின் மருமகளான என் அம்மா வரை அனைவரையும் சொல்லவைக்கிறது.
பொருட்களை காட்டிலும், கருத்தியலில் தான் எனக்கு நாட்டம் அதிகமென்று உணர்ந்து, என் அப்பாவின் திருமணத்திற்கு முன்பே இறந்து போன என் தாத்தா எனக்கு பரம்பரை சொத்தாக பொன்னோ பொருளோ விட்டுச்செல்லாமல் அதீத வேகத்தில் பேசும் பேச்சையும் உறக்கத்தில் அதீத எச்சில் வடிக்கும் பழக்கத்தையும் எனக்கு விட்டுச் சென்றிருக்க, ஆத்தா, தாத்தாவின் பெயரைக் கொண்டதனாலேயே சில மனதிர்களை வேறு பெயர் சொல்லி அழைக்கும் அளவிற்கு தாத்தாவின் மீது மரியாதை வைத்திருப்பதால், தன்னுடைய கதை சொல்லல் சுவாபத்தை என் எழுத்தோடு மட்டும் நிறுத்திக் கொண்டு என் பேச்சு பழக்கத்தில் தாத்தாவிற்கு இடம் கொடுத்து விட்டதால் நான் மட்டும் குடும்பத்தில் சுருங்கப் பேசும் நபராக இருக்கிறேன்.
இலக்கியம், இலக்கணம் என்று ஏதும் அறிந்திராத ஆத்தாவின் இயல்பான கதை சொல்லல் தான், காந்தியார் இறந்த தினத்தன்று இருந்த ஊரின் நிலை முதல் நான் பார்த்திராத தாத்தாவின் வாழ்க்கை வரை அனைத்தையும் என் கண் முன்னேக்கொண்டு வந்து நிறுத்தி, என்னை ஒரு கதை சொல்லியாக உருவாக்கிருக்கிறது.
என் கதைக்கு பின்னிருக்கும் குரலின் நாயகி, சுப்பையாவின் ஜானகிக்கு இன்று (சித்திரை மாதம் உத்திர நட்சத்திரம்) 83 ஆவது பிறந்தநாள், பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்றறியேன்….
ஆசிகள் மட்டும் வேண்டும்
அன்பு பேரன்
ம.ரா.கௌதம் ராஜன்
M.R.Gowtham Rajan
02/05/2023
Comments
Post a Comment