வாசிப்பின் கதை

இராமநாதன் சுப்பையாவிற்கும்‌ வசந்தி கைலாசத்திற்கும் சொல்லப்படாத என் வாசிப்பு பழக்கத்தின் பூர்வகதை

"திப்பு சுல்தான் அந்த பிதிர் சஞ்சார மார்க்க போதினியை ஸ்வப்னஹள்ளி எரிப்பிற்கு முன்புவரை வாசித்ததேயில்லை, அந்த நூல் அவர் தந்தைக்கு மிகப் பெரிய பொக்கிஷமாயிருந்ததாலேயே அதைப்பற்றிய அவருடைய அளவுக்கு மீறின பிரஸ்தாபம் இவரைக் கிட்டத்தட்ட அந்தச் சுவடி முழுவதையும் ஏற்கனெவே பலமுறை படித்து முடித்துவிட்டைதப் போன்ற உணர்வுக்கு ஆளாக்கி விட்டுவிட்டது என்கிறார்கள்", இந்த வரிகள், அப்பாவின் பால்ய கால நண்பனும், தமிழ் இலக்கியத்தின் மிகச்சிறந்த எழுத்தாளரும், என் வாசிப்பின் மானசீக குருவுமான, நவீன நாகரிகம் என்கின்ற பெயரில் உறவுகளை ஆங்கிலத்தில் uncle, aunty என்று அழைக்கும் பழக்கம், அதை தவிர்க்க நினைக்கும், என்னையும் பாதித்திருந்தாலும் கூட, அப்பாவின் நட்பு என்னை, பா வெங்கடேசன் அவர்களை கண்ணா மாமா என்றே அழைக்க செய்கிறது, மாமா 'தாண்டவராயன் கதை' என்னும் புதினத்தில் எழுதியது.

ஹைதர் அலியின் பிரஸ்தாபம், திப்புவிற்கு  நூல்களை படிக்காமலேயே படித்த உணர்வைத் தந்தது போல், என் அப்பாவின், தன்னிடமுள்ள நூல்களின் இலக்கியச் சிறப்பைப் பற்றின, பிரஸ்தாபம் எனக்கும் அதே விளைவை ஏற்படுத்தியதால் என்னால் என்னுடைய பதினெட்டாவது வயது வரை பாட நூல்கள் தவிர வேறு எந்த நூல்களையும் படிக்க முடியவில்லை. திப்புவிற்காவது கம்பெனி சர்க்காரின் நெருக்கடி, மைசூர் போர்கள் என நேரம் சரியாக இருந்தது, ஆனால் என்னைப் படிக்க விடாமல் தடுக்க எந்த காரணமும் இருந்ததில்லை, இருப்பினும் அப்பாவின் பிரஸ்தாபமே எனக்கு எங்கள் வீட்டிலிருந்த நூல்களைப் படித்த நிறைவைக்கொடுத்ததால் நான் படிக்கவில்லை.

தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன் என்னும் வகையில், அப்பாவின் என்னை படிக்க வைக்க வேண்டும் என்ற முயற்சி சற்றும் மனம் தளராமல் தொடர்ந்து கொண்டே இருந்த அந்த நேரத்தில் தான் சீனாவில் இருந்து வந்த அந்த மகாப்பிரபு என்னை பொழுதன்னைக்கும் அப்பாவின் அறிவுறுத்தலோடு இருக்க செய்ய, இனி வேறு வழி இல்லை என்று, பார்த்தவுடன் கவர்ந்த "தனிமையின் நூறு ஆண்டுகள்" என்னும் தலைப்பை கொண்ட கேப்ரியல் கார்சியா மார்க்கஸின் நோபல் பரிசு பெற்ற புதினைத்தை பெருந்தொற்று காலத்தில், நேரத்தைக் கடத்த கையில் எடுத்தேன். 

அன்று நான் எடுத்த அந்த முடிவு, வாசிப்பு என்கின்ற அற்புத கடலில் இறங்க தயங்கிக்கொண்டிருந்ததை வெளிப்படையாக சொல்லாமல், திப்பு, இலக்கிய பிரஸ்தாபம் என்று சோம்பேறித்தனத்திற்கும் கலை நயம் கூட்டி இலக்கிய நடையில் சொல்ல முயற்சிக்க வைத்ததோடு மட்டும் நிற்காமல்,  
இன்று என்னையும் நூல்களின் சிறப்பைப் பற்றி பிரஸ்தாபிக்க வைத்திருக்கிறது.  

என்னுடைய இந்த இலக்கிய வாசிப்பு பழக்கம் தான், பட்டப் படிப்பில் என் வாசிப்பை விஸ்தரித்து. இந்திய‌‌ வரலாறு என்றால் Colonial School, Nationalist School, Marxian School, Subaltern School of History என்று வெவ்வேறு சித்தாந்த நோக்கத்தோடு, பிரஞ்சு புரட்சி என்றால் இன்றைய பாட புத்தகம், புரட்சி நடந்த காலத்தில் எழுதப்பட்ட குறிப்புகள், பிரஞ்சு புரட்சியை கருவாக கொண்ட புனைவுகள், பாபரை படித்தால் பாபரின் சுய சரிதையையும், ராஜ ராஜ ராஜனை படித்தால் அவனின் கல்வெட்டு குறிப்புகளையும், டார்வின் சொன்ன பரிணாம வளர்ச்சியைப் படித்தால் அவரின் ஆய்வு அறிக்கையையும், படிக்கச் செய்து என் வாசிப்பின் பரிமாணமத்தை பண்மடங்காக்கியது. 

இந்த வாசிப்பு பழக்கத்தை எனக்கு ஏற்படுத்தி கொடுத்த என் அப்பாவிற்கு உலக புத்தக தினத்தன்று என் மனமார்ந்த நன்றிகள். அப்பா எனக்கு வாசிப்பு பழக்கத்தையும், தேர்ந்த இலக்கியம் எதுவென்று கண்டறியும் யுக்தியையும் கொடுத்தார். எனக்கு பிடித்த பத்து நூல்கள் என்று வீட்டில் இருந்து எடுத்தால், அந்த நூல்களுக்கு என்னை விட பத்து முதல் பதினைந்து வருடம் வயது அதிகமாக இருக்கும். நான் பிறப்பதற்கு முன்பு இருந்த அப்பாவின் இலக்கியம் சார்ந்த பிரஸ்தாபத்தை என்னை விட வயதில் மூத்த அந்த நூல்கள் இன்றும் எனக்கு கடத்திக்கொண்டிருக்கிறது.

இந்தியாவில் நான்கு ஐந்து மாநிலங்களை தவிர பிற ஊர்கள் எதற்கும் செல்லாத என்னை, தமிழ் இலக்கியத்தில் கல்கி தொடங்கி புதுமைப்பித்தன், தி ஜா, கி ரா,சு ரா, அசோகமித்திரன், பா வெங்கடேசன்; ரஷ்ய இலக்கியத்தில் டால்ஸ்டாய், தஸ்தயேவஸ்க்கி, புஷ்கின், கோகல், செக்காவ்; லத்தின் அமெரிக்க இலக்கியத்தில் மார்க்கஸ், போர்ஹெஸ், ஆலன்டே, கார்தஸார், புயந்தோஸ்; இத்தாலிய இலக்கியத்தில் எக்கோ, கால்வினோ; ஜெர்மன் இலக்கியத்தில் காப்கா, குந்தர் கிராஸ்; பிரெஞ்ச் இலக்கியத்தில் துமாஸ், காம்யு, யுகோ, சாத்தர், குந்தேரா; ஆங்கில இலக்கியத்தில் டிக்கன்ஸ், எலியட், பெர்னார்ட் ஷா; போர்ச்சுகிஸ் இலக்கியத்தில் சரமாகோ; உருது இலக்கியத்தில் மண்டோ, ஜப்பானிய இலக்கியத்தில் கவபட்டா; ஆப்ரிக்க இலக்கியத்தில் சினுவா அச்சிபே; துருக்கி இலக்கியத்தில் ஓரான் பாமுக்; செருபிய இலக்கியத்தில் பாவிச்; அல்பேனிய இலக்கியத்தில் காதர்; ஷுவிடிஷ் இலக்கியத்தில் லாகரக்விஸ்ட்; கிரேக்க இலக்கியத்தில் கஸன்ட்சாக்கிஸ்; என்று, உலகம் முழுக்கச்சுற்ற வைத்து, உலகத்தின் பிரஜையாக்கி, யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று புரியவைத்த அப்பாவின் நூலகத்திற்கு‌ என் நன்றிகள். 

வாசிப்பு ஒரு ஆகச் சிறந்த அனுபவம், அனைவரும் வாசியுங்கள், உலக புத்தக தின நல்வாழ்த்துக்கள்.


23/04/2023
ம.ரா. கௌதம் ராஜன்
M.R. Gowtham Rajan 






Comments