தாத்தாவின் மிதிவண்டி
முன்பெல்லாம் விளக்கு இல்லாத மிதிவண்டிக்கு அபராதம் விதிக்கப்படும் நடைமுறை இருந்ததால் விளக்கு பொருத்தியதாகவும், பின்பு அந்த நடைமுறை வழக்கொழிந்து போக, எரியாமல் போன விளக்கை சரிசெய்யாமல் விட்டு விட்டதாக, மிதிவண்டிக்கு விளக்கு எதற்கென்று ஆச்சரியத்தோடு கேட்ட எனக்கு, தாத்தா தன் மிதிவண்டியை துடைத்துக் கொண்டே கூறிய பதில் அந்த மிதிவண்டியை பார்க்கும் போதெல்லாம் நினைவுக்கு வரும்.
எந்த ஒரு பொருளும், தாத்தாவினுடயது என்றாலோ அல்லது தாத்தாவால் வாங்கிக் கொடுக்கப்பட்டது என்றாலோ, அந்த பொருள் அதே போன்ற மற்ற பொருட்களை காட்டிலும் சிறப்பானதாக தான் இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு வெகு காலமாக இருந்ததால் தான், ஒவ்வொரு முறையும் என்னைக் காண வரும் போது என்ன வேண்டும் என்று கேட்கும் தாத்தாவிடம், மாதுளம் பழம் வாங்கிவருமாறு கூறுவேன். நன்கு விவரம் அறிந்த பின்பு தான், நல்ல பழமாக பார்த்து வாங்கினால், சுவையான மாதுளம் பழம் எங்கள் ஊரிலும் கிடைக்கும் என்பது புரிந்தது.
தாத்தாவும் சலிக்காமல் ஒவ்வொரு முறையும், இங்கு வந்து வாங்கிக் கொள்ளலாம் என்று கூறும் என் அம்மாவின் அறிவுரையை கேட்காமல், தேடி தேடி நல்ல பழமாக பார்த்து வாங்கி, ரயிலில் கொண்டுவந்து எனக்கு கொடுப்பார். தாத்தா அதை கொடுக்கும் போதெல்லாம், அதியமான் ஔவைக்கு கொடுத்த அரிய நெல்லிக் கனியை போல், திருநெல்வேலியில் தாத்தாவிற்கு மட்டும் கிடைக்கும் அரிய மாதுளம் பழமாக கருதி அதைப் பெற்றுக்கொள்வேன்.
என் தாத்தாவை எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் வா போ என்று அழைத்து பழகி விட்டேன். தாத்தாவும் என்றும் என் இளமைக்கு ஏற்றவாறு நடந்து கொள்வதோடு மட்டும் நிற்காமல், குளித்து முடித்த பின்பு என்னுடன், கட்டிய ஈர துண்டோடும், சாரத்தோடும், குத்தாட்டமும் ஆடியிருக்கின்றார். தாத்தா என்னுடன் இல்லாத நாட்களில், நான் குளித்து முடித்துவிட்டு ஆடுவதற்கு அவர் நியாபகமாக, என் அப்பா அம்மாவிற்கு திருமணமான நாள் முதல் சமிபத்தில் இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வரை எங்கள் வீட்டிற்கு, துண்டும் சாரமும் வாங்கிக் கொடுத்துக்கொண்டிருந்தார். கடந்த சில ஆண்டுகளாக வயது முதிர்ச்சி காரணமாக, துண்டு சாரம் வாங்கிக் கொடுக்க முடியாமல் போனதை எண்ணி எண்ணி அவர் வருந்துவதற்கு, நாங்கள் வாங்கும் துண்டு, சாரம் எதுவும் சரியில்லை என்று பார்க்கும் போதெல்லாம் அவரிடம் சொல்லும் எங்களின் புலம்பல் காரணமாகி விட்டது.
தனக்கு வயதாகி விட்டது, என்பதை அவர் என்றுமே உணர்ந்ததில்லை. என் ஆத்தா, அம்மா, மாமா போன்றவர்களின் கவனம் நிறைந்த உபசரிப்பு தான் தாத்தாவிற்கு தன் வயதை உணர்த்தி இருக்கக்கூடும், இல்லாவிட்டால் தான் பிறந்த வருடம் தேதியெல்லாம் சரியாக நினைவில் இல்லாத தாத்தா, இறப்பதற்கு இரு நாட்களுக்கு முன்பு கூட குல தெய்வ கோயிலில் 108 சுற்று சுற்றியிருக்க முடியுமா.
தன் வேலைகளை பிறர் செய்வது என்றுமே தாத்தாவிற்கு பிடிக்காது. தன் துணிகளை துவைப்பது, தான் சாப்பிட்ட தட்டை கழுவுவது என்று தான் சம்பந்த பட்ட அனைத்து வேலைகளையும் தானே செய்து கொள்ள விரும்பிய தாத்தாவின் சுவாபம் தான், தன் மகள், மகன்கள், மருமகன், மருமகள்கள், பேரன்கள், பேத்திகள், பூட்டன் என்று அனைவரையும் முதல் நாள் கண்டு விட்டு, மறு நாள், தான் இறந்து போகும் நாளையும், தன் அம்மா இறந்த அதே திதியைக் கொண்ட அன்றைய நாளை (பங்குனி மாதம் பௌர்ணமி, 04/04/2023) தேர்ந்தெடுக்க வைத்தது போலும். தாத்தாவை இறப்பதற்கு முன்பு கடைசியாக பார்க்காத ஒரே நபர், அவர் மீண்டும் மீண்டும் வரவில்லையா என்று கேட்ட நபர், திருநெல்வேலியில் இருந்து அவரது மிதிவண்டியை எடுத்து வந்து, திருச்சியில் வீட்டுக்கு கொண்டு செல்ல வாகனத்தை அழைக்கும் போது, வாகன ஓட்டுநர் என்ன பொருள் என்று கேட்க பழைய காலத்து ராலே மிதிவண்டி பெரியதாக இருக்கும் என்ற தேவையான வர்ணனை அனைத்தையும் பின்னுக்குத் தள்ளி தாத்தாவினுடய மிதிவண்டி என்ற வார்த்தையை முதலில் சொல்லிப் பிற விவரத்தை பின்சேர்த்துச்சொல்லும், இந்தப் பேரன் தான்.
அவரைக் கடைசியாக உயிருடன் பார்க்கும் பாக்கியம் கிடைக்கவில்லை, அவர் இறந்த பின்பு, அவரோடு நீந்தி குளித்து மகிழ்ந்த தாமிரபரணியில் அவர் அஸ்தியை கரைக்கும் பாக்கியம் தான் கிட்டியது. அவர் கரைந்த போன அந்த ஆற்றில் அவரை பிரிய மனமில்லாமல் நான்கு நாட்களாக தினமும் ஆற்றிக்குப் போய் குளித்துக்கொண்டிருந்தேன். ஊருக்கு கிளம்பும் போதெல்லாம் அவரிடம் இருந்து ஆசி பெற்று விபூதி பூசும் நாட்கள் ஓடிப்போய் அவர் அஸ்தியை பூசிக் கொண்டு திருநெல்வேலியில் இருந்து கிளம்பும் நாளுக்கு வந்து சேர்ந்து விட்டதை அவர் தினமும் துடைத்து சுத்தமாக வைத்து இருக்கும் மிதிவண்டியை இன்று நான் எடுத்து வந்து என் வீட்டில் நிறுத்தி துடைத்து கொண்டிருக்கும் போது கண்ணகளில் சுரந்த நீர் உணர்த்தியது.
தாத்தாவின் - குச்சிக்கால் பாண்டியன்
ம.ரா.கௌதம் ராஜன்
M.R Gowtham Rajan
15/04/2023
Comments
Post a Comment