வானரப் படலம்

ஏட்டுச் சுரைக்காய் கறிக்குதவாது என்கிற மூதுரையை நான் புரிந்துகொண்ட நாளுக்கு வெகு காலத்திற்கு முன்பே நடந்தது அந்த நிகழ்வு.

இருபுறமும் நெருக்கடியாகயிருந்த அந்த சாலையின் நுழைவிடத்தில் வாகனம் இதற்கு மேல் செல்லாது ஆதலால் வாகனத்திலிருந்து கீழே இறங்குங்கள் என்பதை அவர் பேசும் மொழி தெரியாமலிருப்பினும் அந்த சாலையே அதன் நெருக்கடியின் மூலம் உணர்த்தியது. அந்த சாலை
எனக்கு பாடம் கற்பிக்கத்தான் அன்று நெரிசலாக இருந்துதிருக்குமோ என்று பிற்காலத்தில் எனக்கு அந்த நிகழ்வை நினைக்கும் போது தோன்றுவதுண்டு. 

கம்ச மகாராஜாவை கருவில் இருந்து கொண்டே பயங்கொள்ளச்செய்த பிஞ்சு பாலகன் வளர்ந்த பிருந்தாவனம், அந்த நெருக்கடியான சாலைக்கு மத்தியில் உள்ளது. 

வாகனத்தில் இருந்து என் தாத்தா,ஆத்தா, அத்தை, என் மாமா மகன் ஆகியோர் முன்னே செல்ல என் மாமா ஒருவர் மட்டும் வாகன ஓட்டுநர் பேசும் மொழி தெரிந்தவராய் இருப்பதனால் பணம் கொடுத்து விட்டு கடைசியாக வந்தார். நான் அவருக்கு சற்று முன்பு நடந்து சென்று கொண்டிருந்தேன். அந்த தருணத்தில் கம்சனை அலறச் செய்த அசரீதியைப் போல், திடிரென ஒரு மனிதர் தோன்றி என் முகத்தை கைகாட்டி ஏதோ சொன்னார். பின் வந்த மாமா அவர் என்ன சொன்னார் என்று கேட்க, இந்தி பிரச்சார சபா நடத்தும் பரீட்சைகளில் மூன்று தேர்வுகளை கடந்து, பதினோராம் வகுப்பு முடித்து பனிரெண்டாம் வகுப்பு படிக்கப்போகும் எனக்கு, அந்த தீடிர் மனிதர் கூறிய வார்த்தைக்கான அர்த்தம் புரியாவிட்டாலும் அந்த வார்த்தையை என் மாமாவிடம் திரும்பி சொல்லும் அளவிற்க்கான அறிவை கூட எனக்கு நான் விருப்பமில்லாமல் படித்த இந்தி மொழி கொடுக்கவில்லை. அவர் என்ன சொன்னார் என்று கேட்ட மாமாவிற்கு தெரியவில்லை என்று கூறிவிட்டு முன்னேறிச் சென்று கொண்டிருந்தேன்.

அந்த சாலையின் நெருக்கடி காரணமாக நாங்கள் அனைவரும் ஒருவருக்குப் பின் ஒருவராக சென்று கொண்டிருந்தோம். அப்பொழுது திடீரென்று ஒரு பெரிய எடை என் மேல் விழுந்து சென்றது, மருத்துவம் படிக்காவிட்டாலும் அந்த ஒரு நொடியில் நான் மனித மூளையின் வேகமான செயல்பாட்டை உணர்ந்தேன், அந்த எடை எனக்கு என்னிடம் யாரோ எதையோ திருடிச் செல்லும் போது ஏற்படும் உணர்வை கொடுத்தது, என் பேண்ட் பையில் செல்போன் இருக்கிறதா, பர்ஸ் இருக்கிறதா என்பதையெல்லாம் என்னை நானே தொட்டு பார்க்காமலே ஒரு வினாடிக்கும் குறைவாக உணர்ந்தேன். அவையெல்லாம் பத்திரமாகயிருப்பதை உணர்ந்துவிட்டு அடுத்த நொடி பார்க்கிறேன், என் கண்கள் தெளிவாக தெரியவில்லை, அதற்கு அடுத்த வினாடி அந்த கணம் விலகி சென்ற திசையில் திரும்பி பார்க்க, ஒரு வானரம் அதன் கையில் என் கண்கண்ணாடியோடு ஒரு கூரையின் மேல் அமர்ந்துதிருப்பதை நான் கண்ணாடி அணியாவிட்டாலும் காணமல் போய்யிருப்பது கண்ணாடி தான் என்பதால் அறிந்தேன். 

இயல்பாக வானரங்கள் உணவு பொருட்களை மட்டும் தான் மனிதர்களிடம் இருந்து பிடுங்கும் என்ற என் நம்பிக்கையையும் என் கண்ணாடியோடு சேர்த்து பிடுங்கியது. நாங்கள் அனைவரும் திக் அற்று திசையற்று நிற்க, என் ஆத்தா, " அப்பா, ஆஞ்சனேயா கண்ணாடிய கொடுத்துருப்பா" என்று வேண்ட தொடங்கியதை கேட்ட எனக்கு, அந்த தருணத்தில் தோன்றியது வானரத்திடம் பேசும் என் ஆத்தாவின்அறியாமை அல்ல, இந்திகார வானரத்திடம் தமிழில் வேண்டுகிறாயே பாட்டி என்ற எண்ணம் தான்.

அப்பொழுது சாலையில் இருந்த கடைக்காரர்கள் அதை பார்த்து விட்டு மாமாவிடம் வந்து ஒரு ப்ருட்டி ஜூஸ் வாங்கி வீசுங்கள் அது கண்ணாடியை விட்டு விடும் என்று கூற, மாமா ஐயா மகா பிரபு இந்த உபாயத்தை கூறிய நீங்களே அதை வீசுங்கள் என்று அந்த நபரிடம் கூற, அந்த நபர் தன் கடையில் இருந்து ஜூஸ் எடுத்து வந்து வானரத்தை நோக்கி வீச, அந்த வானரம் அதை பிடித்து விட்டு கண்ணாடியை கீழே விட்டது. இப்படி ஒரு உபாயத்தை சொன்ன நபருக்கு நன்றி கூறி ஜூஸ்கான தொகை இருபது ரூபாயை கொடுக்க, அவர் ஜூஸ் இருபது சரி, என் உபாயத்திற்கும், என் சேவைக்கும் முப்பது என்று கூறி மொத்தம் ஐம்பதை வாங்க, அருகில் இருந்த கடைக்காரர் தன் கடைக்கு முன்னால் இந்த சம்பவத்தை செய்யாமல் போன வானரத்திடம் கோபம் கொண்டு, ஐயா அடுத்த முறை ஜூஸ் எல்லாம் வேண்டாம் இதற்கு முன்பு சென்ற ஒரு மூதாட்டியின் கண்ணாடியை வானரம் பிடுங்க, அவர்கள் கையில் இருந்த சப்பாதியை வைத்தே மீட்டனர் என்று கூறி, வானரத்திற்கு ஜூஸ் இல்லாமலும் பக்கத்து கடைக்காரருக்கு அவரின் உபாயத்தின் மூலம் வரும் வருமானத்தையும் நிறுத்தினார்.

அப்பொழுது தான் நான் சுற்றி நடப்பதை உணர்ந்தேன். வெண்ணையைத் திருடி உண்ணும் கண்ணின் வளர்ப்பிடத்தில் சாலையின் இருபுறமும் இனிப்பு கடைகள் நிறைந்து வழிய, அந்த வானரம் அந்த கடைகளூள் இருந்து ஒரு பொருளை கூட எடுக்காமல் இருப்பதை கண்ட பிறகு தான், இந்த கடைக்காரர்களே அந்த வானரத்தை அப்படி பழக்கி உள்ளனர் என்று, ஐம்பது ரூபாய் அனாமத்தாக போனதை, நினைத்து வருந்தினேன். அட பாதிக்க பட்ட ஒருவர் கூட நமக்கு இதை சொல்லி இருக்க கூடாதா என்று தோன்ற, அந்த அசரீரி மனிதர் சொன்ன வார்த்தை சட்டென்று நினைவுக்கு வந்தது அவர் கூறியது, "பந்தர்" என்ற வார்த்தையை கொண்ட வாக்கியம்.

அப்படி என்றால் வானரம் என்று பொருள் என்று உணர்ந்து, வானரங்கள் இருக்கும் ஆதலால் கண்ணாடி பத்திரம் என்பதைத்தான் அவர் சொல்லியிருக்கிறார் என்றதை உணரும்போது, கரடியே காரி துப்பிய 23 ஆம் புலிகேசியைவிட, அகஸ்தியர் கைட் வாங்கி இந்தி படித்து இருந்தும், மூன்று தேர்வில் தேர்ச்சி பெற்றும், இந்த எளிய வார்த்தைக்கான அர்த்தத்தை, சிறு வயதில் இந்தி படித்துக்கொண்டிருந்த நான், இந்தி தெரியாத என் நண்பர்களை திட்டுவதற்கு பயன் படுத்திய சொல்லைக் கூட, கண்டு பிடிக்க முடியவில்லையே என்று நினைத்து வெட்க பட, என் தோளின் மேல் ஒரு கைப்பட யாரென்று பார்க்க என் தாத்தா, என் அருகில் வந்து, " கௌதம் ஊருக்கு சென்ற உடன் அம்மாவிடம் சொல்லி ஆஞ்சனேயர் கோவிலிற்குச் சென்று இரண்டு விளக்கு ஏற்ற சொல்" என்று சொல்ல, நான் என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் திக்கற்று உத்திர பிரதேசத்தில் நின்று கொண்டு இருப்பதாய் என் நினைவலை முடிகிறது.

பிடிக்காமல் ஒரு பாடத்தை படித்தால் என்னவாகும் என்று நான் பின்நாட்களில் பிறருக்கு சொல்லுவதற்கும், எனக்கு பிடிக்காத பொறியியலை தான் படிக்க வேண்டும் என்று என்னை வற்புறுத்திய அம்மாவிடமும், என் தரப்பு வாதத்தை வலு சேர்க நடந்தேரிய இந்த வானர படலத்தை இன்று கூற காரணம், எனக்கு பிடித்து நான் சண்டையிட்டு தேர்ந்தெடுத்த படிப்பான வரலாற்றில் இளங்கலை முடித்து இன்று முதுகலை படிக்கும் நான், இளங்கலையில் கல்லூரியில் முதல் மாணவன், பல்கலைக்கழக அளவில் இரண்டாம் இடம், இன்று கல்லூரி தினத்தன்று இளங்கலை படிப்பில் First Prize for Overall Proficiency from UG History Department for the academic year 2021- 2022 என்று பரிசும் வாங்கி உள்ளேன். நான் எனக்கு பிடித்த வரலாற்றை படித்தேன், பரிட்சையில் தேர்ச்சி பெற வேண்டுமென்று அல்ல, வரலாற்றை தெரிந்துக்கொள்ள வேண்டும் என்று.

ஷெர்லாக் ஹோம்ஸ்ன் ஒரு பிரபலமான கூற்று தான் நினைவுக்கு வருகிறது, " Play the game, for the game's own sake", அதாவது எதைச் செய்தாலும், அந்த செயலை செய்வதன் மூலம் கிடைக்கும் மகிழ்ச்சிகாக செய்ய வேண்டுமே தவிர, அந்த செயலை செய்து முடித்ததன் விளைவாக கிடைக்கும் விஷயத்திற்காக செய்யக்கூடாது என்பதுதான்.

ஆக, கிடைத்த ஒரு பிறவியில் பிடித்ததை மேற்க்கொள்ளுங்கள், அறிவை வளர்க்க முயற்சி செய்யுங்கள், மதிப்பெண்ணும், பரிசும் தானாக தேடி வரும்….


ம ரா கௌதம் ராஜன்
25/03/2023

பின்சேர்க்கை 

எனக்கு பிடித்த வரலாற்றில் முதுகலையும் படித்து, அதில் பல்கலைக்கழகத்தில் முதல் மாணவனாக தேர்ச்சியும் பெற்று, தங்க பதக்கம் வென்று, அதை ஆளுநரிடமிருந்து பல்கலைக்கழகத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவன்றுபெற்று, இன்று கல்லூரியில் நடக்கும் பட்டமளிப்பு விழாவில் பட்டமும் பெற்றேன்.

04/01/2025






Comments