தாத்தாவின் திவசம்
“சில நினைவுகள் அவை உருவானத் தருணம் மறந்து படைப்பில்லாக் கனவாய் மாறி மனதை விழிக்கச்செய்ய, கனவு காண்கிறேன் அவ்விழித்திருக்கும் மனதைக் கொண்டு”
- ம.ரா. கௌதம் ராஜன்
“என் தாத்தா தர்மானந்த கோஸாம்பியை எனக்குத் தெரியாது. இதைக் கேட்பதற்கு அதிர்ச்சியாக இருக்கும். ஆனால் அதுதான் உண்மை. தாடி வைத்த ஒரு முதியவரின் உருவம் - புனேயில் அவர் எங்களை பார்க்க வந்திருந்தபோது - என் குழந்தைப் பருவத்து மனதில் பதிந்துபோயிருந்தது; இந்தப் பதிவு அவரை நேரில் பார்த்த நினைவிலிருந்து உருவானது என்பதை விட எங்கள் வீட்டு வரவேற்பு அறையில் மாட்டியிருந்த அவருடைய புகைப்படத்திலிருந்து உருவானது என்பதே சரியாக இருக்கலாம். இதற்கு சில நாட்களுக்குள் அவர் வார்தா காந்தி ஆசிரமத்தில் உண்ணாநோன்பு இருந்து உயிர்நீத்தார்.”
- மீரா கோஸாம்பி (தர்மானந்த கோஸாம்பியின் சுயசரிதையின் ஆங்கில மொழிபெயர்ப்புக்கு எழுதிய முன்னுரை - தமிழில் காலச்சுவடு வெளியீடு)
வெங்கட்ராம தாத்தாவைப் பற்றி நான் எங்கு, எப்போது, எப்படி அறிந்துகொண்டேன் என்று என்னால் அறுதியிட்டுச் சொல்லமுடியாது. அவரைத் தெரிந்திருந்தும் அவரைத் தெரியாமல் வாழும் குடும்பத்தாருக்கு அவரைப் பற்றி எடுத்துச் சொல்லவேண்டி நான் பிறந்ததாக வைத்துக்கொள்ளும் பட்சத்தில் நான் அவரைப் பற்றி அறிந்தே பிறந்தேன். அப்படியிருக்க வாய்ப்பில்லை என்பதாக சொல்லப்படுவதால், விடுமுறைக்கு என்னை என் அம்மா, ஆத்தா தாத்தா வீடு என்று சொல்லி அழைத்துச் சென்ற போது எனக்குப் புதிதாக தோன்றிய வீட்டில், அம்மாவிற்கு பழகிய வீடாக தோன்றும்போது, இருந்த இருவர், ஆத்தா தாத்தா என்று முன்னமே சொல்லப்பட்டு என்னோடு அறிமுகமாகி வார்த்தைகளாக இருந்தவர்கள், உருவங்கொண்ட மனிதர்களாக பிறந்த பின்பு, ஆத்தா (வெங்கட்ராம தாத்தாவின் மகள்) தன் அப்பாவைப் பற்றிச் சொல்லிய பிறகு நான் தாத்தாவைத் தெரிந்துகொண்டேன் என்று எடுத்துக்கொண்டால், ஆத்தா என்னிடம் அவரைப் பற்றி சொல்லிய நொடியின் நினைவு ஆதியும் அந்தமும் இல்லாத கனவாக மாற, தாத்தாவும் அந்த கனவுக்குள் உலாவருபவராக மாற, அவரை என் கனவில் கண்டு கொண்டேன். எப்படியாயினும், என்னுடனான அவரின் இருத்தல் விஷேசமானது.
என்னோடு மட்டுமின்றி, அவர் எம் குடும்பத்தின் வேறு சில உறுப்பினர்களோடு கொண்ட உறவும் விஷேசமானது என்பதோடு மட்டுமில்லாமல் வித்தியாசமானது.
முதலில், விடுமுறைக்கு என்னை தன் அம்மா வீட்டுக்கு அழைத்துச் செல்லும் என் அம்மாவிற்கு, சுதந்திரத்திற்காக போராடியவரும் சுதந்திரம் கிடைத்த பின்பு காயல்பட்டினத்தில் முதன் முதலாக கொடியேற்றியவருமான அவர், அவளின் தியாகி தாத்தா (அம்மாவின் அப்பா). விஷேச வீடுகளில் அவ்வப்போது பார்த்துக்கொள்ளும் ஓன்று விட்ட அன்னம்மா பெரியம்மாவிற்கு, விடுமுறையின் போது திருச்செந்தூருக்கு சென்றால் பேருந்திலிருந்து இறங்கிய பின்பு சுதந்திர போராட்ட தியாகிகளின் நினைவாக வைக்கப்பட்டிருக்கும் தூணில் உள்ள கல்வெட்டில் பொறிக்கப்பட்டிருக்கும், தொட்டுப்பார்த்தும் வணங்கிவிட்டும் செல்லவைக்கும், பெயரைக் கொண்ட தாத்தா.
அடுத்து, வெங்கட்ராமன் தன் மகளோடும் மருமகனோடும், ஒருவரின் நினைவை வைத்தே இருவேறு விதமாக உறவு கொண்டிருந்தார்.
ஆத்தா, தன் அப்பா வெங்கட்ராமனைப் பற்றி சொல்லும் போது, என் அம்மா ஏற்கனவே எனக்கு சொன்ன தகவல்கள் வரும் வேளையில், அது அம்மாவின் தாத்தா, அது வேண்டாம், உன் அப்பாவைப் பற்றிச் சொல் என்று நான் சொல்ல, ஆத்தா தன் நினைவில் தங்கியிருக்கும் அப்பாவைப் பற்றியதான கடைசி நினைவுகளைச் சொல்ல ஆரம்பிப்பாள். அதில் அவர் காயல்பட்டிணத்தின் கர்ணமாக இருப்பார். வீட்டிலேயே இல்லாமல் சுதந்திரத்திற்காக போராடிக்கொண்டிருப்பார். அப்படி போராடிக்கொண்டிருந்த போது ஒருமுறை காவலர்கள் வந்து அவரைக் கைது செய்து கொண்டு போனார்கள். விஷயமறிந்த ஆத்தாவின் அத்தைகள் பதறி போய் தம்பியை காவலரிடமிருந்து மன்றாடிக் காப்பாற்றி, இனி போராட்டத்திற்கு செல்ல மாட்டேன் என்று மன்னிப்பு கடிதமெழுதவைத்து வெளியே கூட்டி வர, அவரோ காவல் நிலையத்தின் வாசலிற்கு வந்த உடனே, விண்ணை நோக்கி வந்தே மாதரம் என்று கோஷமிட, காவலர்கள் சினம் கொண்டு மீண்டும் பிடித்துக்கொண்டுபோய் பூட்ஸ் காலால் மிதித்து அவரை அவரின் சகோதரிகளின் கண் முன்னே சிறையில் அடைத்தார்கள் என்று ஆத்தாவின் நினைவு முடியும். பின்பு வேறு வேறு என்று நான் கேட்டால், ஒரு முறை உறவினர் ஒருவர் யாரோ உதவி என்று கேட்க, கட்டியிருக்கும் கதர் வேட்டியை அவிழ்த்து கொடுத்து விட்டு தோளில் உள்ள துண்டை உடுத்திக்கொண்டு வீடு வந்ததாகவும், கடைசி காலங்களில் போலீஸின் அடியால் உடல் நலமும் மன நலமும் குன்றிப்போய் தனக்கு மூன்று வயதிருக்கும் போது இறந்ததாக முதல் தடவையும், நான்கு வயது என்று அடுத்துக் கேட்ட ஏதோவொரு தடவையும், சரியா நியாபகம் இல்லடா, விவரம் தெரியாத வயதில் என்று அழுத்தமாக கேட்க ஆரம்பித்த பிற தடவைகளிலும் சொல்லுவாள்.
இப்படியாக தாத்தா தன் மகளினிடத்தில் இருந்தார் என்றால், அவ அப்பா சுதந்திரக்கும் போராடல ஒன்னும் போராடல, குண்டி வேட்டி மறந்து தூங்கிட்டு இருந்தா, போலீஸ் புடுச்சுட்டு போயிருச்சு என்றும், மன நிலை சரியில்லாமல், அதனோடையே இறந்து போனவரின் மகளான என் ஆத்தாவை, கோட்டிக்காரன் மவ தான நீ என்றும் சொல்லி செல்லமாக கேலி செய்யும், எம் ஜி ஆரின் விலகலுக்கு முன் திராவிட முன்னேற்றக் கழகத்தின் போர்வாளாக இருந்த, விலகலுக்குப் பின் கலைஞரென்று சொல்லாமல் கருணாநிதி என்றே சொல்லிக்கொண்டும், எனக்கு தெரியாத திருநெல்வேலி கெட்ட வார்த்தைகளைக் கொண்டு திமுகவை ஏசிக்கொண்டும், அனேகமாக இறந்து போன நாளன்று ஆஸ்பத்திரிக்கு ஆத்தா சட்டை மாற்றி கூட்டிப்போன வேளையைத் தவிர பிற நாட்கள் அனைத்திலும் சட்டை அணிந்தாலே காலரில் எம் ஜி ஆர் போல் கர்ச்சீப் வைத்துக்கொள்ளும் மருமகனிடத்தில் செல்லமாக கோட்டிகாரனாகவே இருந்தார்.
இப்படி வெங்கட்ராமன் தன் மருமகனோடு கொண்டிருக்கம் உறவைப் பார்க்கும் போது, வெங்கட்ராமன் ஒரு மருமகனாக அவரின் மாமனார் மாமியாரிடம் எப்படி உறவு கொண்டிருப்பார் என்று யோசிப்போமேயானால்; திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு தைலம் காய்ச்சிக்கொடுத்து அதற்கு படித்தரமாக இரண்டு கட்டிச்சோறு, இரண்டு தோசை, ஒரு அப்பம், ஒரு வடையைப் பெறும் தைலம் திருமலையப்பன் (சம்மு ஆத்தாவின் அம்மா வழி தாத்தா, வெங்கட்ராமனின் மாமனார்), பெருங்கண்ணங்குளம் ஊரின் நிலக்கிழார், சாப்பிடும் போது தன் சாப்பாட்டில் ஏதோவொரு சிறு கல் வந்தாலே அதை பொறுக்கி எடுத்து மனைவி அன்னம்மாளின் புறங்கையை நீட்டச்சொல்லி விரல் நகத்திற்கு கீழுள்ள பகுதியில் வைத்து நசுக்குவார், அவர் தன் மகளை இரண்டாம் தாரமாக, முதல் மனைவி இறந்த பின் மணந்து, ஐந்து பிள்ளைகளைக் கொடுத்துவிட்டு வீட்டைக் கவனிக்காமல் நாட்டுக்குப் பணியாற்றி, இளம் மனைவியை தவிக்க விட்டு விட்டு, அகால மரணமைடந்த மருமகனை என்ன செய்வாரென்றும், கணவர் இருக்கும் போது வாயைத் திறக்காத அன்னம்மாள் தன் மகளின் வாழ்க்கையை நினைத்து என்ன சொல்லிப் புலம்பியிருப்பாளென்றும், நான் பிறந்து வந்து கேட்கும் வரை பொறுமையில்லாமல் தங்கள் பெயர்களை மட்டும் அடுத்த தலைமுறைக்கு விட்டுச் சென்றுவிட்டதால், அதை தெரிந்துகொள்ள முடியாது.
அதனால் அவர்களை விட்டு விட்டு என்னால் பார்க்க முடிந்த நபர்களை நோக்கி வரும் பட்சத்தில், அம்மா வழி தாத்தாவின் பெயரைப் பெற்ற திருமலை என்கின்ற வெங்கட்ராம தாத்தாவின் மகன், வருடா வருடம் தைப்பூசத்தன்று தன் அப்பாவிற்கு திதி கொடுப்பதுண்டு. மற்ற நாட்களில் ஊருக்கே உதவி செய்யும் போதெல்லாம் தன் அப்பாவை அவர் நினைத்துக்கொண்டாலும், தைப் பூசதன்று மட்டும், அப்பா இறந்த நாள் என்பதால், கொஞ்சம் அதிகமாக அப்பாவை நினைப்பதுண்டு. வருடா வருடம் இப்படி நடந்தாலும், இரண்டாயிரத்தி பனிரெண்டாம் ஆண்டு தைப்பூசத்தன்று மட்டும் அப்பாவின் ஞாபகம் திருமலைக்கு அதீதமாக வந்ததால் அது வெங்கட்ராமனையே சென்று சேர்ந்துவிட்டது. வெங்கட்ராமன், மகன் தோளுக்கு மேல் வளர்ந்ததைப் பார்க்கவில்லை, ஆதலால் மகன் தன்னை நினைக்கிறான் என்று தெரிந்ததும் உடனே பறந்து வந்து வளர்ந்த மகனை கட்டியணைத்து முத்தம் கொடுத்து தோளில் சுமந்து தூக்கிச்சென்றார். அதனால் அதற்கு பின் வந்த தைப்பூசங்களில் திவச சாப்பாடு இலையின் மறுபக்கதில் திருமலை அப்பாவோடு அமர்ந்திருப்பார்.
மேல் சொன்ன நபர்களைத் தாண்டி, குடும்பத்தின் ஒரு சில நபர்களுக்கு வெங்கட்ராமன் தாத்தா, அவர்கள் பெயர்களின் காரணகர்தா. மற்ற நபர்களுக்கு அவர் வெறும் ஒரு கருப்பு வெள்ளை புகைப்படம்.
ஆக, இப்படி குடும்பத்திலுள்ள ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கோணத்தில் தெரிந்த மனிதர் என்னுடைய கனவான நினைவுகளில் அவரவர் சொன்ன கதைகளுக்கு ஏற்ப உருவம் கொண்டு உலா வரும் ஆவியாக இருந்தார். நானும் அவ்வப்போது நினைத்த நேரத்தில் உருவத்தை மாற்றிக்கொள்ளும் ஆவியாக இருக்கும் அவரைப் பின் தொடர்ந்தே காலத்தை நகர்த்திக்கொண்டிருந்தேன். ஒரு கட்டத்தில் எனக்கு இரண்டு ஆசைகள் வந்தன. ஓன்று எனக்குள் ஆவியாக இருந்தவர் பிறரின் கதைகளாலும் நினைவுகளாலும் ஆனவர் அதனால் அதை தவிர்த்து என்னால் சிருஷ்டிக்கப்பட்ட ஒருவராக அவரை என் நினைவுக்குள் உலாவ விட வேண்டும். மற்றொன்று அவர் வெகு காலம் ஆவியாகவே இருந்து விட்டார், அதை மாற்றி அவருக்கு இடமும் காலமும் கொடுத்து இரத்தமும் சதையும் கொண்ட மனிதராக மாற்ற வேண்டும்.
அந்த முயற்சியில், அரசு ஆவணங்களையும் வரலாற்று நூல்களையும் துணைக்கு அழைத்துக்கொண்டு, சென்ற வருடம் இறங்கினேன்.
இர்வின் ஒப்பந்தத்தின் அடிப்படையில், குடியியற் சட்ட மறுப்பு போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்துவிட்டு, லண்டனில் நடந்த இரண்டாம் வட்ட மேசை மாநாட்டில் கலந்து கொண்டு, அதன் தோல்விக்குப் பிறகு, இந்தியாவிற்கு திரும்பி வந்திருந்த மகாத்மா காந்தியை ஒரு சில நாட்கள் கழித்து, ஜனவரி நான்கு ஆயிரத்தி தொள்ளாயிரத்தி முப்பத்தி இரண்டாம் ஆண்டில் கைது செய்து சிறையில் அடைத்ததோடு இல்லாமல், இர்வினுக்கு பிறகு வந்திருந்த வைஸ்ராய் வில்லிங்டன், தனக்கிருக்கும் ஏகபோக அதிகாரத்தைப் பயன்படுத்தி, ஜனநாயகமற்ற அவசர சட்டங்களை அமல் படுத்தி, சர்காரை எதிர்க்கும் அனைவரையும் கைது செய்ய ஆரம்பிக்க, சட்ட மறுப்பு இயக்கம் முழு வீச்சோடு மீண்டும் துவங்கியது. அப்போது தமிழ்நாட்டில் காந்தியாரின் தலைமையை ஏற்று போராடிய எண்ணற்ற தமிழக தியாகிகளோடு சேர்ந்து, தன் கர்ணம் வேலையை துறந்துவிட்டு, காயல்பட்டினத்தில் கள்ளுக்கடை மறியலில் ஈடுபட்ட வெங்கட்ராமனை, அவசர சட்டத்தின் நான்காவது சரத்தின் படி, கைது செய்து கொக்கிரகுளம் சிறையில் நான்கு மாதமும், திருச்சிராப்பள்ளி மத்தியச் சிறையில் கடுங்காவல் கைதியாக ஒரு வருடமும் வைத்திருந்தது பிரிட்டிஷ் சர்கார்
பின்பு, இரண்டாம் உலக போரில் தோல்வியை சந்தித்துக் கொண்டிருந்த பிரிட்டிஷார், போரில் இந்தியர்களின் ஒத்துழைப்பை நாடி நிற்கும் போது, வெறுங்கையோடு வராமல் பெயரளவிற்கு ஏதோ ஒரு வாக்குறுதியை கொண்டுவந்து, ஆகஸ்ட் ஆஃபர் என்ற பெயரில் பூர்ண சுதந்திரம் கேட்டுக்கொண்டிருந்தவர்களிடம் டோமினியன் அந்தஸ்து மட்டும் அதுவும் போர் முடிந்த பின்பு வழங்க முன்வந்தது. அதை எதிர்த்து, போரில் ஹிட்லர் வென்று விடக்கூடாது, அதே நேரத்தில் பிரிட்டிஷ் சர்காரையும் எதிர்க்க வேண்டும், அதனால் நாட்டு மக்கள் அனைவருமாக இல்லாமல் தேர்ந்ததெடுக்கப்பட்ட நபர்களை மட்டும் கொண்டு பேச்சுரிமைக்காவும், போரில் கலந்து கொள்ள விருப்பமில்லை என்பதை தெரிவிப்பதற்காகவும், வன்முறையை எதிர்கொள்வதற்கு வன்முறை தீர்வு அல்ல என்பதை உணர்த்துவதற்காகவும், போராடச் சொல்லிய, காந்தியாரால் வார்தாவில் நடந்த காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்ட, தனி நபர் சத்தியாக்கிரகத்தில், ஆயிரத்தி தொள்ளாயிரத்தி நாற்பத்தி ஒன்றில், வெங்கட்ராமனும் போராடினார்.
காந்தியார் "செய் அல்லது செத்துமடி" என்று ஆக்ரோஷமாக அறிவித்த பின்பு பிறந்த வெள்ளையனே வெளியேறு இயக்கம், ஆயிரத்தி தொள்ளாயிரத்தி நாற்பத்தி இரண்டாம் ஆண்டின் ஆகஸ்ட் மாதத்தில் ஆகஸ்ட் புரட்சியாக இந்தியா முழுவதும் வெடிக்க, திருசெந்தூர் தாலுகா பரபரப்பாகியது. குலசேகரபட்டின உப்பளத்தின் உதவி ஆய்வாளர் லோன் துரை உடன்குடி பகுதியைச் சேர்ந்த தியாகிகளால் கொலை செய்ய படுகிறார். இந்த சம்பவம் குலசேகரப்பட்டினம் சதி வழக்கு என்று அரசாங்கத்தால் வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்பு, பிரிட்டிஷ் சர்கார் தனது கொடுங்கோன்மை கொண்ட மலபார் சிறப்பு போலிஸ் (M.S.P) என்னும் தண்ட காவல் படையை திருச்செந்தூர் தாலுகாவிற்கு அனுப்பி, கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவரை தேட மட்டும் பயன்படுத்தாமல், சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபடும் முக்கியஸ்தர்கள் அனைவரையும் கைது செய்ய ஆரம்பிக்க, காயல்பட்டினத்தின் மேனாள் கர்ணமாக இருந்த, விடுதலைக்கான போராட்டங்களில் தொடர்ந்து இயங்கிக்கொண்டிருந்த, வெங்கட்ராமனும் கைது செய்யப் படுகிறார்.
ஆக, நான் மேற்கொண்ட செயலின் முடிவில் வெங்கட்ராம தாத்தாவை ஒரு ஆளுமையாக உருவாக்கினேன். அதன் விளைவாக, இத்தனை நாள் பிறரின் நினைவுகளின் மற்றும் கதைகளின் உதவியோடு என்னுள் ஆவியாக இருந்தவர், அப்போது முதல் நான் சொன்ன தகவல்களிலிருந்து மனிதராக என்னுள் மட்டுமின்றி எல்லோருள்ளும் சென்று சேர்ந்தார்.
அப்படி சென்று சேர்ந்த நாளுக்குப் பிறகு வரும் முதல் தைப்பூசம் இன்று. அவரின் நினைவு நாள். தாத்தா, உங்கள் ஆசியைத் தவிர வேறு என்ன வேண்டும் இப்பிறவியில்.
நன்றி
ம.ரா. கௌதம் ராஜன்
11/02/2025 - தைப்பூசம்
பின் சேர்க்கை - 1
என் அப்பா, தன் ஆத்தாவிடம் (அம்மா வழி ஆத்தா) கேட்ட தன் தாத்தாவின் திவசம் பற்றிய தகவலிலிருந்து, எழுதிய கவிதை தான் நான் இதை எழுதுவதற்கு ஊக்கம். அந்த கவிதை,
தாத்தாவின் திவசம்
தாத்தாவின் திவசம் வரும்.
கார்த்திகை மாதத்து கிருஷ்ணபட்சத்து
நவமியன்று.
ஊரில்—
திருநெல்வேலியில் இருந்தால்
பாட்டி:
திருவிழா பேச்சியம்மன் கோவிலில்
கோட்டையரிசி பொங்கி விநியோகித்துச்சாமி
ரிஷப வாகனம் வரும்,
வைக்கத்தஷ்டமியின் மறுநாளென்று
அடையாளம் காண்பாள்.
வழியில்லையதற்கு பட்டணத்தில்.
இருந்தாலும்
என்ன செய்து விட போகிறோம் பெரிதாய்?
“வாங்கத் தெரியாமல்” வாழ்ந்து
“போய்ச் சேர்ந்த” வக்கீல் குமாஸ்தா தாத்தாவிற்கு
என்றாலும்–
அஷ்டமி நவமிகளை ஞாபகப்படுத்தச்
சிலராவது
இருந்து வருகிறார்கள்
அவளுக்கிங்கே இன்னுமும்.
- எஸ். இராமநாதன்
Comments
Post a Comment