ஒரு சொப்பனத்தின் கதை
ஐஃபில் டவரிலும் எகிப்திய பிரமிடுகளிலும் வில்லனின் அடியாட்கள் துறத்த, தப்பித்துச்செல்ல டவரிலும் பிரமிடுகளிலும் குதித்து, தாவி ஓடி தப்பிக்கும் ஜாக்கிச்சான்னின் கார்டூன் கதாப்பாத்திரம், வரலாற்றுப் பொக்கிஷங்களைத் தேடி மீட்டெடுக்கும் ஒர் தொல்பொருள் ஆராய்ச்சியாளர். அப்படி என்றால் என்னவென்றே தெரியாத காலத்தில் மனதில் பதிந்த அந்த காட்சி தான் முதன் முதலில் அந்த ஓரு சொப்பனத்தை மனதில் வரைந்தது.
பள்ளிக்கூடத்தில் சேர்ந்த பின்பு பரிட்சைக்காக படித்த இந்திய சுதந்திரப் போராட்ட வரலாறு நினைவில் இருந்து இறங்குவதற்குள் அவசர அவசரமாக விடுமுறைக்கு திருநெல்வேலிக்கு அம்மா வழி ஆத்தா தாத்தா வீட்டுக்கு சென்ற போது, வீட்டி பூஜை அறையில் சாமி படங்களோடு சேர்த்து வைக்கப்பட்டிருந்த ஒரு கருப்பு வண்ண படத்தில் இருக்கும், பாரதி மற்றும் வ உ சி யின் புத்தகத்தில் இருந்த படங்களைப் போல், கருப்பு கோட் மற்றும் தலைப்பாகை அணிந்த, மீசை மட்டும் இல்லை, மனிதரைப் பார்த்து இவர் யார் என்று கேட்ட கேள்விக்கு, அவர் தான் என் அப்பா, சுதந்திர போராட்ட தியாகி வெங்கட்ராமன், சுதந்திரத்திற்காக போராடி சிறைச்சாலைக்கெல்லாம் சென்றிருக்கிறார் என்று ஆத்தா சொல்லக்கேட்ட போது, என் பூட்டனின் புகைப்படத்தின் வழியே அந்த சொப்பனத்துக்குள் சென்றேன்.
பின்பு, திருச்செந்தூர் வடக்கு ரத வீதியில், சட்டைப் பையில் ரோஜா பூ குத்தியிருக்க, ஊர்வலமாக நடந்து வந்த ஜவகர்லால் நேருவைக் கண்டு, அவரைத்தான் திருமணம் செய்துகொள்வேன் என்று அடம்பிடத்த அம்மாவழி ஆத்தாவின் கதைகளும், அம்பாசமுத்திரத்தில் படம் பாக்க சென்று திரையரங்கில் தரையில் அமர்ந்து படம் பார்த்துக்கொண்டிருக்கையில், படம் முடியும் முன்பே பாதியிலேயே அமர்த்த பெற்றதனால், அழுதுகொண்டும் மீதி படத்தை பார்க்க வேண்டும் என்று புலம்பிக்கொண்டும் திரும்பிச் சென்ற, காந்திய கொன்னுடாங்களாம் படமும் கிடையாது ஒன்னும் கிடையாது சும்மா கிட, என்று படம் நிறுத்தப்பட்டதற்கான காரணத்தை வருத்தத்துடன் கேட்ட என் அப்பா வழி ஆத்தாவின் கதைகளும் என்னை மேலும் அந்த சொப்பனத்திற்குள் ஊடுருவ செய்தது.
பிரசவத்திற்காக தாயகத்திற்கு சென்றுகொண்டிருந்த மாயா தேவியின் வயிற்றிலிருந்து அவசரமாக போகிற வழியிலேயே பிறந்த கௌதம புத்தரைப்போலவே, பிரசவத்திற்காக தாயகத்திற்கு திரும்பிக்கொண்டிருந்த என் அம்மா விபத்திற்குள்ளாகியதானால் அவசரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, கௌதமரின் பெயரையே பெற்றுப் பிறந்ததனாலும், ராஜ ராஜனின் ஜென்ம நட்சத்திரத்தில் பிறந்ததனாள் ராஜன் என்றும் பெயரிடப்பெற்று, அந்த ராஜ ராஜன் வெட்டிய உய்யக்கொண்டான் கால்வாயின் கரையோரமே வசித்து வருவதாலும், ஒரு கட்டத்திற்கு மேல் நானாகவே ஆர்வம் கொண்டு அந்த சொப்பனத்திற்குள் நீந்த ஆரம்பித்துவிட்டேன்.
அப்படி அந்த சொப்பனத்தில் நீந்தி குறிப்பிடத்தக்க இலக்கை அடைந்ததற்கு அத்தாட்சியாக இன்று இந்த தங்க பதக்கத்தை எம் பல்கலைக்கழகத்தின் வேந்தரும், மரியாதைக்குரிய தமிழ்நாட்டின் ஆளுநருமானவரிடமிருந்து பெற்றேன். இன்னும் பயணப் பட பல மைல் தூரங்களைக் கொண்டது என் சொப்பனம்.
நீந்தி மகிழ, பாரதி வார்த்தையில்,
நின்னைச் சில வரங்கள் கேட்பேன்
அவை நேரே இன்றெனக்குத் தருவாய்
எந்தன் முன்னைத் தீவினைப் பயன்கள்
இன்னும் மூளாது அழிந்திடல் வேண்டும்
என்னைப் புத்துயிராக்கி
எனக்கேதும் கவலையறச் செய்து
மதிதன்னை மிகத் தெளிவு செய்து
என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச்
செய்வாய்
என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச்
செய்வாய்…
ம ரா கௌதம் ராஜன்
29/10/2024
Comments
Post a Comment