நடுசாம பயணம்
அன்றைய இரவை இரவாகவே என்னால் உணர முடியவில்லை. மக்களின் மனதில் இருக்கும் பிரகாசம் வானத்தை ஒளியால் நிரப்பியது. அந்த ஒளி சாலையில் நடந்து கொண்டிருந்த எனக்கு பகலாக பிரகாசித்தது. ஆனால் தள்ளாடும் வயதில் நடுசாமத்தில் ஆர்வமாக ஊருக்குள் செல்ல தயாராகிக் கொண்டிருக்கும்,புலியின் விடுதலையை காண, வயோதிகர்களின் பயணத்திற்கு போதுமானதாக இருக்கவில்லை.
இத்தனை ஆண்டுகள் அதிகார போதைக்கு அடிமையான அந்த சிங்கத்திற்கு கூண்டில் இருக்கும் புலியை விடுவிக்கும் நாளையும் நேரத்தையும் முடிவெடுக்கும் அதிகாரத்தை அந்த புலிக்கே கொடுக்க பெருந்தன்மை இல்லை என்று அனைவரும் சிங்கத்தை ஏசிக் கொண்டே வந்தனர். விடுவிக்கப் படும் நாளை சிங்கம் தேர்ந்தெடுத்தது உண்மை தான். ஆறாம் ஜார்ஜ் மன்னருக்கு உறவினாராய் இருந்த, 1940 களின் நாயாகனான பிரதமர் சர்ச்சிலின் ஆதரவையும், 1945ல் அதே நாயகனை தோற்கடித்த தொழிலாளர் கட்சியை சேர்ந்த, ஜப்பான் மீது குண்டு வீச அனுமதி அளித்த, பிரதமர் அட்லியின் ஆதரவையும் பெற்ற, தென் கிழக்கு ஆசிய நாடுகளில் இருக்கும் நேச நாட்டுப் படைகளுக்கு தலைமை தளபதியாக இருந்த, லுயிஸ் மவுண்ட்பேட்டனிடம் ஜப்பான் சரணடைந்த நாள் ஆகஸ்ட் 15 1945, போர் முடிந்து பின் நாளில் வைஸ்ராய் ஆக பதவி ஏற்ற பிறகு தான் வெற்றி கண்ட நாளின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தில் தான் புலியை விடுவிப்பேன் என்று சிங்கம் தீர்மானமாக இருந்தது. ஆனால், விடுவிக்கும் நேரத்தை புலி தான் சிங்கத்திடம் கொடுத்தது.
புலியின் நலன் விரும்பிகள் ஆகஸ்ட் 15 சுப நாள் இல்லை, ஆக வேறு நாள் வேண்டும் என்று கேட்க, சிங்கம் மறுக்க, புலி சிந்திக்க, புலியின் சாஸ்திரங்களுக்கும் நிலவிற்கும் சச்சரவு போலும், அதனாலையே அவை கணக்குகள் ஆதவனின் வரவையும் போதலையும் நம்பி இருக்கிறது. புலியின் சாஸ்திரம் ஆதவனை நம்பினால் சிங்கத்தின் சாஸ்திரம் நிலவை ஒட்டி இருப்பது ஆச்சரியம் அற்ற விசயம். ஆக, புலி நடு சாமத்தில் என்னை விடுவிக்க வேண்டும், நடுசாமத்தில் ஆதவன் இல்லை ஆக புதிய நாள் இல்லை, ஆனால் நிலவு இருக்கும், ஆக உன் கணக்குப்படி நடு சாமம் புதிய நாள் தான், அதனால் என்னை நடுசாமத்தில் விடுதலை செய் என்று சிங்கத்திடம் புலி தான் சொன்னது என்ற விஷயத்தை அவர்களுக்கு கூற எனக்கு தோன்றியது, ஆனால் நேரமில்லாதக் காரணத்தால் அவர்களை கடந்துச் சென்று கொண்டிருந்தேன்.
சாலையை கடக்கும் போது அங்கிருந்த ஒரு பெரிய வீட்டின் அறையிலிருந்த பெட்டியிலிருந்து ஒரு கம்பீர குரல் ஆங்கிலத்தில் ஒலித்தது. சாலையில் இருந்த அனைவரும் குரலை கேட்டவுடன் அந்த ஒலியை நோக்கி கூட்டமாக சென்றனர். அந்த ஒலி, " Long years ago, we made a tryst with destiny; and now the time comes when we shall redeem our pledge, not wholly or in full measure, but very substantially. At the stroke of the midnight hour, when the world sleeps, India will awake to life and freedom…" என்று ஒலித்தது. அந்த ஆங்கில வரிகளை அங்கிருந்தவர்களுக்கு மொழிபெயர்கவும், பேச்சை முழுக்க கேட்கவும் நேரமில்லாமல் ஊரை நோக்கி ஓடிக் கொண்டிருந்தேன்.
சிங்க நாட்டு ஆசிரியர் ஒருவர் கொடுத்த பிரபலக் கருத்து, "Charity begins at home", "தனக்கு மிஞ்சியே தானமும் தர்மமும்" என்பதாகும். இந்த கருத்து சிங்கத்தின் நாட்டில் உருவெடுத்த கருத்து, சிங்கம் தான் ஆண்ட நாடுகளில் அதன் கருத்துக்களை பரப்பும் பணியில் இருந்ததால் அது புலி நாட்டு மக்களிடமும் பரவியது. ஆனால் புலி நாட்டு மக்களிடம் ஏற்கனவே இருந்த கருத்து "யாதும் ஊரே, யாவரும் கேளிர்". அதன்படி ஊர் முழுக்க என் குடும்பம் தான், ஆக ஊருக்கு உழைப்பது தன் குடும்பத்திற்கு உழைப்பது போன்றது என்று ஆங்கிலயே சிங்கம் கூறிய கருத்திற்கு புதிய பரிமாணத்தை புலி நாட்டு மக்கள் கொடுத்தனர்.
அப்படிப்பட்ட கருத்தை தாங்கிய புலியின் மீது பற்று கொண்ட, தன் ஆறு குழந்தைகளுக்கும், (நான்கு பெண், இரண்டு ஆண்), மனைவிக்கும் எதுவும் பெரிதாக சேர்க்காமல் புலியின் விடுதலைக்காகவேண்டி, ஆயிரத்தி தொள்ளாயிரத்தி முப்பத்தி இரண்டாம் ஆண்டில் குடியியற் சட்ட மறுப்புப் போராட்டத்தில், தன் கர்ணம் வேலையைத் துறந்துவிட்டு, பங்கு எடுத்து, ஒர் ஆண்டு திருச்சி சிறையில் கழித்தும், ஆயிரத்தி தொள்ளாயிரத்தி நாற்பத்தி ஒன்றில் தனி நபர் சத்தியாக்கிரகத்தில் பங்கு கொண்டும், பின்பு நாற்பத்தி இரண்டாம் ஆண்டில் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கு கொண்டு சிறை சென்றும், சிங்கத்தின் காவலாளிகள் காலில் அணிந்து இருக்கும் பூட்ஸ் காலால் அடி வாங்கி உதை வாங்கி சிறையில் சித்திரவதை பட்டு அதன் மூலம் விளைந்த புத்தி பேதலிப்பினால் புலியின் விடுதலையை மட்டும் கண்டுவிட்டு தன் பிள்ளைகளின் வாழ்வு சுதந்திர புலியின் ஆட்சியில் எப்படி இருக்கும் என்பதை பார்க்கும் முன்னே, நான்கு பெண்களில் ஒரு பெண்ணிற்கு மூன்று வயது இருக்கும் போது, இறந்து போன காயல் பட்டினத்தின் முன்னாள் கர்ணம் திரு வெங்கட்ராமன், அன்றைய சுதந்திர இரவில் காயல்பட்டினத்தில், முதன் முதலில் கொடி ஏற்றினார் என்பதை அவர் இறந்த போன போது மூன்று வயது இருந்த என்னுடைய பாட்டி சொல்ல கேட்டு, இன்றைய 75 ஆவது சுதந்திர தினத்தில் அனைவரும் 75 ஆவது கொடியேற்றத்தை பார்க்க பயணித்து கொண்டிருக்கிற வேளையில், நான் என் முப்பாட்டன் முதல் சுதந்திரத்தினத்தன்று ஏற்றியக் கொடியைக் காண காயல் பட்டினத்திற்கு விரைந்து கொண்டிருக்கிறேன்.
இந்தியா என்ற ஒரு நாடு இருந்தது இல்லை, இருப்பது இல்லை, இருக்க போவதும் இல்லை, என்று உரக்க பிரச்சாரம் செய்த சர் ஜான் ஸ்டேரச்சே வின் கருத்தை கூறி புலியை பரிகசித்த ஆங்கில சிங்கங்களுக்கு இன்று இந்த இந்திய புலியின் ஒற்றுமை புரிந்து இருக்கும் ஆனால் அன்று புரியவில்லை. இருந்த ஒற்றுமையை குலைக்க இந்தியாவை பிரிவினைக்கு சில வாரங்களுக்கு முன்பு தான் முதன் முதலில் இந்தியாவிற்கு வந்த நபரிடம் பிரிக்கும் பொறுப்பை கொடுத்தது. சொல்லில் அடங்கா பல யுக்திகளை கையாண்டு சிங்கம் புலியை வீழ்த்த நினைத்தது. இத்தனை முயற்சிகள் மேற்கொண்டு நான் வீழ்வேன் என்று நினைத்தாயே நான் வீழ வில்லை. என் முப்பாட்டன் பெற்ற சுதந்திரத்திற்கு இன்று 75 வயதாகிறது என்று அந்த ஆங்கில சிங்கத்திற்கு சொல்லிக் காட்ட இந்த நடு சாம பயணத்தை மேற்க்கொண்டிருக்கிறேன்.
" The sun never sets in the British Empire" என்று ஆங்கில சிங்கம் மார் தட்ட காரணம், சூரியன் மறையும் இடமும் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் பகுதி, உதிக்கும் இடமும் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் பகுதி, அதனால் எங்கள் கொடி என்றும் சூரியனை கண்டு கொண்டே இருக்கும் ஆக எங்கள் சாம்ராஜ்யத்தில் சூரியன் அஸ்தமிக்காது என்று கர்ஜித்தது. அத்தகைய யூனியன் ஜாக் கொடி ஆகஸ்ட் 15 1947 க்கு பிறகு இந்திய மண்ணில் சூரியனை கண்டதில்லை, காண்பதில்லை, காணபோவதுமில்லை. இனி இந்திய மண்ணில் என்றும் சூரியனை காணப்போகும் இந்திய புலியின் மூவர்ண கொடியை ஏற்றும் என் முப்பாட்டனை காயல் பட்டினத்தில் பயணத்தின் முடிவில் கண்டேன்.
ம ரா கௌதம் ராஜன்
M R Gowtham Rajan
15/08/2022
To Know more about him, do visit the blog Thiyagi R Venkatraman.
Comments
Post a Comment